விவசாய பாசனத்திற்காக மாயனூர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறப்பு

விவசாய பாசனத்திற்காக மாயனூர் புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,632 ஏக்கர் பாசனை வசதி பெறுகிறது.

Update: 2021-08-01 19:08 GMT
கிருஷ்ணராயபுரம்
தண்ணீர் திறப்பு
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க கரூர் மாவட்டம், மாயனூரில் உள்ள புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் இருந்து விவசாய பாசனத்திற்காக நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. 
இந்த வாய்க்காலானது கரூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் வழியாக 133.80 கிலோ மீட்டர் கடந்து சென்று இறுதியில் பிடாரி ஏரியில் கலக்கின்றது. இவ்வாய்க்காலில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மொத்தம் 20,632 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது. 
137 நாட்கள்...
இதில் திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 107 குளங்கள் மூலம் 12,294 ஏக்கர் நிலங்களும், திருச்சி மாவட்டத்தில் 8,338 ஏக்கர் நிலங்களும் பாசன வசதிபெறும். ஒருபோக சாகுபடிக்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் நேற்று முதல் வருகிற 15.12.2021-ந்தேதி வரை 137 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் வழங்கப்பட உள்ளது.  தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சிமன்ற தலைவர்கள், கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்