‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் பெங்களூரு இடைத்தரகர் கைது சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் பெங்களூரு இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-03 15:23 GMT
சென்னை,

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் தேனி மருத்துவக்கல்லூரியில்தான் முதலில் இது கண்டறியப்பட்டது. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய ரூ.20 லட்சம் கைமாறப்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தேனி மருத்துவ கல்லூரி மாணவர் உதித் சூர்யா என்பவர் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் கைதானார்.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள 3 மருத்துவகல்லூரிகளில் படித்த மாணவர்கள் பிரவீன், அபிராமி, ராகுல் மற்றும் அவர்களின் தந்தைகளும் கைதானார்கள். கேரளாவில் ‘நீட்’ பயிற்சி மையம் நடத்தி வந்த ஜார்ஜ் ஜோசப் என்பவரும் கைதானார். தேனி மாணவர் உதித் சூர்யாவுக்காக ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வை எழுதிய மாணவர் முகமது இர்பான் என்பவரும் சிக்கினார். இதுபோல மொத்தம்7 மாணவர்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் கொரோனா தொற்று நாட்டையே ஆட்டிப்படைத்ததால், இந்த வழக்கும் சூடு குறைந்து காணப்படுகிறது.

சென்னை மருத்துவ கல்லூரி

இதற்கிடையே சென்னை மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த தனுஷ்குமார் என்ற மாணவரும் ஆள்மாறாட்டம் செய்து, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றதாக புகார் கொடுக்கப்பட்டது. இவர் ஓசூரைச் சேர்ந்தவர். இவருக்கு இந்தி தெரியாது. ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள கயா ‘நீட்’ தேர்வு மையத்தில் இந்தியில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்தி தெரிந்த ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பாக சி.பி. சி.ஐ.டி. போலீசார் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மாணவர் தனுஷ்குமாரும், அவரது தந்தையும் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் நேற்று இந்த வழக்கில் திடீரென்று சூடு பிடித்தது.

இடைத்தரகர் கைது

பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீஹர்ஷா (வயது 38) என்ற இடைத்தரகரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இந்த வழக்கில் கைது செய்தனர். ஸ்ரீஹர்ஷாதான் ரூ.20 லட்சம் வாங்கிக்கொண்டு, தனுஷ்குமாருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வு எழுத வைத்துள்ளார். எனவே அவர் சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்