இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதலுக்குப் பின் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழிகாட்டுதல் வழங்கியபின்னர், 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Update: 2021-08-04 13:05 GMT
சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் நேர்வழி இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு வகுத்த விதிகளின்படி, தமிழகத்தில் கடந்த ஜனவரி 21-ந் தேதி முதல் சுகாதாரத் துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மே மாதம் முதல் 18 முதல் 44 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

தொற்று பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள், அத்தியாவசிய சேவைத் துறைகளின் ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில் நிறுவன ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, ஜூலை 6-ந் தேதி வரை சுகாதாரத் துறையைச் சேர்ந்த 8 லட்சத்து 55 ஆயிரத்து 165 பேருக்கும், முன்களப் பணியாளர்கள் 11 லட்சத்து 9 ஆயிரத்து 196 பேருக்கும், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் 54 லட்சத்து74 ஆயிரத்து 237 பேருக்கும், 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 52 லட்சத்து 63 ஆயிரத்து 657 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 32 லட்சத்து 27 ஆயிரத்து 877 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு தடுப்பூசி

உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 18 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இதுவரை எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை. அவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்போது, பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய பார் கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் ஆகியவற்றையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையை 12-ந்தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்