கொரோனா பரவலை தடுக்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை மற்ற நாட்களில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி

கொரோனா பரவலை தடுக்க சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-05 20:58 GMT
சேலம்
கொரோனா பரவல் அதிகரிப்பு
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் மாநில அளவில் சேலம் மாவட்டம் 8-வது இடத்தில் உள்ளது. இந்த அளவு குறைந்ததற்கு பொதுமக்கள், அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதால் வெளி இடங்களில் இருந்து குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் பேர் ஏற்காட்டுக்கு வருகின்றனர். இதனால் தொற்று பாதிப்பு தற்போது அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.. இதன் எதிரொலியாக ஏற்காட்டில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை
அப்போது வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருகின்றனர். அவர்களால் தொற்று பரவல் அதிகரிப்பது கள ஆய்வில் தெரிய வந்தது. எனவே கொரோனா பரவலை தடுக்க வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் ஏற்காட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதே போன்று கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கும் அனுமதி ரத்து செய்ய்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வருகிற 9-ந் தேதி வரை மட்டும்தான். அதன்பிறகு அரசு உத்தரவுப்படி புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அதன்படி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும்.
அபராதம் விதிப்பு
சமீப காலமாக கோவில்களில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருப்பதை காணமுடிகிறது. அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இனி அபராதம் விதிக்கும் அளவிற்கு பொதுமக்கள் இடம் கொடுக்க கூடாது.
இது வரை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 30 சதவீதம் அதாவது 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்