தமிழகத்தில் இருந்து கர்நாடகம் வருவோருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்

கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வருவோருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-08-06 21:44 GMT
கொள்ளேகால்: கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வருவோருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மந்திரி எஸ்.டி.சோமசேகர் தெரிவித்து உள்ளார். 

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கேரளா மற்றும் மராட்டியத்தில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இதனால் மாநில அரசு அந்த 2 மாநில எல்லைகளில் உள்ள 8 மாவட்டங்களில் வார இறுதி நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடுமையாக கடைபிடிக்கவேண்டும். 
கேரளா, மராட்டியத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இருந்து கர்நாடகம் வருவோரும் 72 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கொரோனா நெகட்டிவ். சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் கட்டாயம் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த விஷயத்தில் சமரசம் செய்ய மாட்டோம். 

பா.ஜனதாவின் பலம் அதிகரிக்கும்

என்.மகேஷ் எம்.எல்.ஏ. பா.ஜனதாவில் சேர்ந்ததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அவர் இணைந்ததன் மூலம் மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பா.ஜனதாவின் பலம் அதிகரிக்கும். மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை ஓரிரு நாளில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் அளிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்