வடமதுரை அருேக ஆடு திருட வந்தவர் என நினைத்து மனநலம் பாதித்தவரை தாக்கிய பொதுமக்கள்

வடமதுரை அருேக ஆடு திருட வந்தவர் என நினைத்து மனநலம் பாதித்தவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-08-07 16:33 GMT
வடமதுரை:
வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி ஆடுகள் திருடு போயின. இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், ஆடு திருடர்களை கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது. 
இதற்கிடையே வடமதுரை அருகே கொம்பேறிபட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் சுற்றிக்கொண்டிருந்தார். இதை பார்த்த பொதுமக்கள், அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், ஆடு திருட வந்தவர் என்று நினைத்து அவரை தாக்கினர். பின்னர் அந்த நபரை, வடமதுரை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 
இதையடுத்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த முருகன் (வயது 50) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வடமதுரை பகுதியில் சுற்றி திரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் முருகனை குடும்பத்தினருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்