குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பெண்ணின் கையில் பொருத்திய ஊசி உடைந்தது

ஊட்டி மகப்பேறு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றுவதற்காக பெண்ணின் கையில் பொருத்திய ஊசி உடைந்தது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததாக புகார் எழுந்தது.

Update: 2021-08-07 19:31 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் குடியிருப்பில் வசித்து வருபவர் சுரஜ் பகதூர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சஞ்சனா(வயது 28). கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்காக கடந்த 30-ந் தேதி ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து, அதன்பிறகு வீடு திரும்பும்படி டாக்டர்கள் அவரை அறிவுறுத்தினர். பின்னர் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்காக அவரது கையில் குளுக்கோஸ் ஏற்ற பொருத்தப்பட்டு இருந்த ஊசியை செவிலியர் எடுத்தார். அப்போது ஊசியின் ஒரு பகுதி உடைந்து உள்ளே சிக்கி கொண்டது. இதனால் வலியால் சஞ்சனா அவதி அடைந்தார். இதுகுறித்து சுரஜ் பகதூர், டாக்டரிடம் தெரிவித்தும், மேல்சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வர காலதாமதமானது. 

இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் ரவிசங்கர், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர். அப்போது கையில் சிக்கிய ஊசியை எடுக்க உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக சஞ்சனா புகார் கூறினார். பின்னர் 3 மணி நேரத்திற்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அவர், மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். 

இதுகுறித்து இருப்பிட மருத்துவ அதிகாரி ரவிசங்கர் கூறியதாவது:- ஊட்டி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சஞ்சனா என்பவரது கையில் இருந்து குளுக்கோஸ் செலுத்த பொருத்திய ஊசியை வெளியே எடுத்தபோது, அதன் முனையில் உள்ள பிளாஸ்டிக்கின் சிறுபகுதி உடைந்து உள்ளே சிக்கிக்கொண்டது. 

இதனை அறுவை சிகிச்சை செய்து எடுக்க வேண்டும். ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து விடலாம். ஊட்டியில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் உடலுக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்