கொரோனா பரவலால் கூட்டம் கூட தடை: ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்பு கோவில்களில் நடை சாத்தப்பட்டன

கொரோனா பரவலால் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டதால் ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் தவித்தனர். கோவில்களில் நடை சாத்தப்பட்டன.

Update: 2021-08-08 17:47 GMT
புதுக்கோட்டை:
தர்ப்பணத்திற்கு தடை
மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசையில் நீர்நிலைப்பகுதிகளில் தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக நீா் நிலைப்பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டதோடு, தர்ப்பணம் கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவில் அருகே பல்லவன் குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். இதற்காக தனியாக இட வசதி உள்ளது. 
இந்த நிலையில் அரசின் தடை உத்தரவின் காரணமாக அந்த இடம் நேற்று மூடப்பட்டன. மேலும் நகராட்சி நிர்வாகத்தினால் அறிவிப்பு பதாகை அதில் வைக்கப்பட்டிருந்தன. இதனால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். அதேநேரத்தில் சிலர் கடையில் வெற்றிலை, பாக்கு, பழம், எள் வாங்கி வந்து குளக்கரையில் வைத்து வழிபட்டு, எள்ளை குளத்தில் வீசினர். முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.
கோவில் நடை சாத்தல்
கோவில்கள் நடை திறக்கப்படாதது என அறிவிக்கப்பட்டிருந்ததால் சாந்தநாத சாமி கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் நுழைவுவாயில் கதவு முன்பு அகல்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் வெளியில் நின்று சாமி கும்பிட்டனர். இதேபோல திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலிலும் நடை சாத்தப்பட்டு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் பலர் கோவில் வளாகத்தில் நின்று அம்மனை நினைத்து வழிபட்டனர். அரசின் உத்தரவின் படி கோவில்களில் கூட்டம் கூடுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோடியக்கரை கடற்கரை
மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில், ஆடி அமாவாசையையொட்டி அறந்தாங்கி, பேராவூரணி, காரைக்குடி, புதுக்கோட்டை என பல்வேறு பகுதியிலிருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராட பொதுமக்கள் வந்தனர். ஆனால் கொரோனா பரவலால் கோடியக்கரைக்கு சென்று பொதுமக்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் மணமேல்குடியிலிருந்து கோடியக்கரை செல்லும் சாலையை தடுப்பு வேலி அமைத்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கோடியக்கரைக்கு செல்லாமல் தடை விதித்து பொதுமக்களை திருப்பி அனுப்பினர். இதனால் வாகனங்களில் வந்தவர்கள் தர்ப்பணம் செய்யாமலும், கடலில் குளிக்காமலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  கோடியக்கரை கடற்கரை பகுதி மற்றும் கோடிவிநாயகர் கோவிலில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
திருவரங்குளம் அருகில் உள்ள மேட்டுப்பட்டி கடைவீதியில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஞாயிற்றுக்கிழமை என்றாலே நண்டு, மீன், மட்டன் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலை மோதும். இந்த வாரம் ஆடி அமாவாசையால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காய்கறிகள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடி அமாவாசையை முன்னிட்டு மட்டன் மற்றும் மீன் வியாபாரம் குறைந்து காணப்பட்டது. இதனால் மட்டன், மீன் கடைகள் குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு இருந்தது.
திருவரங்குளம் தெப்பக்குளம், ஆன திருக்குளம், திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் வீற்றிருக்கும் வில் ஆற்றங்கரை இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக இப்பகுதி பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் செய்திகள்