தடையை மீறி மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்கு வெளியே நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்

தடையை மீறி மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்கு வெளியே நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.

Update: 2021-08-16 06:07 GMT
மாமல்லபுரம்,

கொரோனா 3-வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுதந்திர தினமான நேற்று மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் புராதன சின்னங்களை கண்டுகளிப்பதற்கும், கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூடுவதற்கும் தடை விதித்து இருந்தது. அதனால் முக்கிய புராதன சின்னங்களில் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன.

ஆனால் தடையை மீறி ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று மாமல்லபுரம் வந்திருந்ததை காண முடிந்தது. வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன சின்னங்களின் நுழைவு வாயில் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் ஏமாற்றம் அடைந்த பயணிகள் கம்பி வேலிகளுக்கு வெளியே தொலைவில் நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்துவிட்டு செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து ரசித்தனர்.

அதேபோல் பயணிகள் கடற்கரைக்கு செல்லாத வண்ணம் கடற்கரைக்கு செல்லும் பிரதான சாலையை தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டாலும் மாற்று பாதை வழியாக சென்று கடற்ரையில் பயணிகள் வருகை தந்ததையும் காண முடிந்தது. பலர் அங்குள்ள கடற்கரை கோவிலை ஒட்டியுள்ள பாறைகள் மீது செல்பி மோகத்தில் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்ததையும் காண முடிந்தது. பல வாலிபர்கள் தடையை மீறி மதுபோதையில் கடலில் குளித்தனர். போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்து விரட்டியும் யாரும் அதை கண்டு கொள்ளாமல் மெத்தன போக்குடன் கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

புராதன சின்னங்கள் மூடப்பட்டிருந்ததாலும் நேற்று திரண்ட சுற்றுலா பயணிகள் மூலம் நடைபாதை கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாவுக்கு தடை ஒரு புறம் விதிக்கப்பட்டு இருந்தாலும் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா வாகனங்களின் வருகை அதிகம் காணப்பட்டது. இதனால் முக்கிய பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம் நகர பகுதிகளில் பயணித்த வாகனங்களை ஒழுங்குபடுத்தி ஒன்றன்பின் ஒன்றாக செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.

மேலும் செய்திகள்