ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ காலில் காண்பித்ததால் கொன்றேன்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ காலில் காண்பித்ததால் கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2021-08-24 17:39 GMT
அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனத்தூரை அடுத்த சேமங்கலம் மலட்டாற்றில் கடந்த 4-ந் தேதி 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆனத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன், திருவெண்ணெய்நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், அந்த பெண் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்படியென்றால் பெண்ணை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

கள்ளக்காதலன் கைது 

இந்த நிலையில் பெண்ணை எரித்துக் கொன்றதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அழகுபெருமாள்குப்பம் ரெட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தபாவாடை மகன் ஏழுமலை(வயது 58) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் சந்தான கிருஷ்ணனிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர், போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். அப்போது ஏழுமலை போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
உல்லாசம் 
நான், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பகண்டை கோழிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மனைவி ஜெயலட்சுமி(51) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம். 
இதனை தொடர்ந்து ஜெயலட்சுமியை சென்னைக்கு அழைத்துச்சென்றேன். அங்குள்ள ஒரு மருத்துவமனையில் ஜெயலட்சுமிக்கு வேலை வாங்கி கொடுத்தேன். இருவரும் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தோம். 

வீடியோ காலில் காண்பித்தார் 

நாளடைவில் ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. அவர், சில ஆண்களுடன் கள்ளத்தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு உல்லாசம் அனுபவித்து வந்தார். அதனை செல்போனில் வீடியோ எடுத்து வந்து, என்னிடம் காட்டினார். அதுமட்டுமின்றி ஆண்களுடன் உல்லாசமாக இருக்கும்போதே வீடியோ கால் செய்து, எனக்கு காண்பித்தார். இதை கண்டித்தும், அவர் கேட்கவில்லை. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். 
அதன்படி கடந்த 3-ந் தேதி பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூரில் தனது மாமனார் கர்ம காரியத்திற்கு வருமாறு ஜெயலட்சுமியை சென்னையில் இருந்து அழைத்து வந்தேன். 

தீயிட்டு எரித்தேன் 

அரசூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆனத்தூர் வழியாக சேமங்கலம் மலட்டாற்றில் நடந்து சென்றபோது, இரும்பு உளியால் ஜெயலட்சுமியை குத்தினேன். இதில் படுகாயமடைந்த அவர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர் அருகில் கிடந்த விறகு மற்றும் குச்சிகளை சேகரித்து ஜெயலட்சுமி மீது போட்டு தீயிட்டு எரித்தேன். இதில் உடல் கருகி அவர் இறந்தார். அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டேன். போலீசார் தேடியதை அறிந்ததும் சரண் அடைந்தேன். 
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறினார். 

மேலும் செய்திகள்