கந்திலி அருகே; 24 பவுன் நகை நூதன முறையில் திருட்டு

கந்திலி அருகே முதியவரை ஏமாற்றி 24 பவுன் நகைகளை நூதன முறையில் திருடிச்சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-24 18:27 GMT
திருப்பத்தூர்

கந்திலி அருகே முதியவரை ஏமாற்றி 24 பவுன் நகைகளை நூதன முறையில் திருடிச்சென்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பணம் கொடுத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் மண்டலநாயன குண்டா பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது 65). இவரது மனைவி லட்சுமி (60). இவர்களுடைய மகன் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். 

இந்தநிலையில் தேவன் நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது மனைவி லட்சுமி நிலத்திற்கு ஆடுகளை மேய்க்க சென்றுள்ளார். 

அப்போது 35 வயது உடைய ஆண் மற்றும் பெண் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் லட்சுமிக்கு ரூ.3 ஆயிரம் தரவேண்டும் என கூறி பணத்தை தேவனிடம் கொடுத்தனர்.

பின்னர் அதை பீரோவில் வைத்து விடுவதாக கூறியுள்ளார்கள். அதற்கு தேவன் பீரோ சாவி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை எனக் கூறி உள்ளார்.  

24 பவுன் நகை திருட்டு

உடனே அவர்கள் இருவரும் லட்சுமியிடம் போனில்  பேசுவது போன்று நடித்து பீரோவின் மேல்இருந்த சாவியை எடுத்து, பீரோவை திறந்து அதில் இருந்த 24 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு, பணத்தை பீரோவில் வைத்து விட்டதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு வந்த லட்சுமியிடம், தேவன் நடந்ததை கூறியுள்ளார். உடனடியாக லட்சுமி நமக்கு யாரும் பணம் தரவேண்டியதில்லையே எனக்கூறி பீரோவை பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

 இதுகுறித்து லட்சுமி கந்திலி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நூதன முறையில் 24 பவுன் நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்