தம்பதி கொலையில் ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது

பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி கொலை வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-08-24 20:18 GMT
பெங்களூரு: பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி கொலை வழக்கில் ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தம்பதி கொலை

பெங்களூரு குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காசிநகர் பகுதியில் வசித்து வந்தவர் சாந்தராஜ் (வயது 65). இவரது மனைவி பிரேமலதா (62). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஒரு பெண்ணை இவர்கள் தத்தெடுத்து வளர்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி சாந்தராஜூம், பிரேமலதாவும் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

அதாவது சாந்தராஜை கத்தியால் குத்தியும், பிரேமலதாவின் கழுத்தை கம்பியால் இறுக்கியும் மர்மநபர்கள் கொலை செய்து இருந்தனர். இதுகுறித்து குமாரசாமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தம்பதியை கொன்று மர்மநபர்கள் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

4 பேர் கைது

இந்த நிலையில் தம்பதியை கொலை செய்தது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த நாராயணசாமி, திருப்பதியை சேர்ந்த கங்காதர், தேவாங்கம் ராமு, ஷேக் ஹசிப் ஆகியோர் தான் என்பது போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து ஆந்திராவுக்கு சென்ற தனிப்படை போலீசார் 4 பேரையும் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமி, சாந்தராஜ் வீட்டில் வாடகைக்கு இருந்து உள்ளார். 

பின்னர் அவர் வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்று விட்டார். ஆனாலும் சாந்தராஜ், பிரேமலதாவுடன் நாராயணசாமி நட்பாக பழகி வந்து உள்ளார். மேலும் அவர்களின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நாராயணசாமி, சித்தராஜ்-பிரேமலதாவை கொன்று நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து சித்தராஜ்-பிரேமலதாவை கொன்றுவிட்டு பீரோவில் இருந்து தங்கநகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 193 கிராம் தங்கநகைகள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்