கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை திறப்பு: கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை நீர் திறக்கப்பட்டதால் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2021-08-26 23:50 GMT
சென்னை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரம் மண்டலம் கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி என்ற இடத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் கொள்ளளவு நேற்று முன்தினம் நிரம்பியது. இதையடுத்து ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் பள்ளிப்பட்டு வருவாய்த்துறை துறையினருக்கு கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணை நீர் திறக்கப்படுவதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா ஆலோசனையின்படி பள்ளிப்பட்டு வருவாய்த்துறையினர் ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட போவதை முன்கூட்டியே அறிவித்தனர்.

அந்த நேரத்தில் யாரும் ஆற்றை கடக்க வேண்டாம் என்று அவர்கள் தண்டோரா மூலம் அறிவித்தனர். இந்த நிலையில் ஆந்திர நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணையின் கதவுகளை நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திறந்துவிட்டனர்.

வெள்ளப்பெருக்கு

அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி தண்ணீரை வெளியேற்றினார்கள். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் பள்ளிப்பட்டு பகுதியை நேற்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தது. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திர அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அம்மபள்ளி அணையை மூடினர். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மதியம் 12 மணி வரை அதிக அளவில் பாய்ந்தது.

மேலும் செய்திகள்