பெங்களூருவில் நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்

பெங்களூருவில் நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி ஹர்தீப்சிங்புரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2021-08-29 21:13 GMT
பெங்களூரு:
  
7½ கிலோ மீட்டர் நீளம்

  பெங்களூருவில் நாகசந்திரா முதல் பனசங்கரி எலச்சனஹள்ளி வரையிலும், பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலும் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் விஸ்தரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் எலச்சினஹள்ளியில் இருந்து அஞ்சனாபுரா வரை 6.23 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முன்பு அதில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

  அதைத்தொடர்ந்து ரூ.1,920 கோடி செலவில் நாயண்டஹள்ளியில் இருந்து கெங்கேரி வரை 7½ கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-வது நீட்டிப்பு திட்டத்தில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட்டது. அந்த பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து அந்த நீட்டிப்பு பாதையில் அதாவது நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடக்க நிகழ்ச்சி நாயண்டஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி ஆகியோர் பச்சை கொடி அசைத்து மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் அந்த மெட்ரோ ரெயிலில் கெங்கேரி சேட்டிலைட் ரெயில் நிலையம் வரை பயணம் செய்தனர். அங்கு நடைபெற்ற விழாவில் அவர்கள் கலந்து கொண்டனர். இதில் பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

உள்கட்டமைப்பு வசதிகள்

  கெம்பேகவுடாவின் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாக வைத்து பெங்களூரு நகரை இன்னும் சிறப்பான முறையில் கட்டமைக்க வேண்டியது அவசியம். பெங்களூருவில் உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுவதை உறுதி செய்ய அம்ருத நகரோத்தன திட்டம் அறிவிக்கப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  இதற்காக அதிக வாகன நெரிசல் ஏற்படும் 12 சாலைகளை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கி சிக்னல் நடைமுறையை அமல்படுத்துவது, பிற நகரங்களுக்கு செல்லும் சாலைகளை, வாகன நெரிசல் இல்லாத நிலையை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

போக்குவரத்து சேவைகள்

  பெங்களூருவில் தற்போது 2-வது கட்டபெங்களூரு மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்பட்டு, மெட்ரோ ரெயில் சேவை மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆனால் 2024-ம் ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிப்பது கடினம் என்று அதிகரிகள் கூறுகிறார்கள். கஷ்டப்பட்டு பணிகளை மேற்கொண்டால் எல்லாம் சாத்தியமாகும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.

  தேவனஹள்ளியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிவிரைவு உள்ளூர் ரெயில் சேவை, மெட்ரோ ரெயில் மூன்று பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். பெங்களூருவில் இருக்கும் அளவுக்கு போக்குவரத்து சேவைகள் நாட்டின் வேறு எந்த நகரங்களிலும் இல்லை. மெட்ரோ ரெயில் வசதி, பெங்களூரு நகரின் வருங்கால ஜீவநாடி ஆகும். பெங்களூருவுக்கு மெட்ரோ ரெயில் சேவை மிக முக்கியம் ஆகும்.

ராமநகர் வரை

  பெங்களூருவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க அனுமதி கொடுத்தவர் வாஜ்பாய். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியவரும் அவரே. இந்த பணிகளை விரைவுப்படுத்தும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். வரும் காலத்தில் ராமநகர், ராஜானுகுன்டே, மாகடி வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

  அதைத்தொடர்ந்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி பேசியதாவது:-
  பெங்களூருவில் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளுக்கு பணிகளுக்கும் மத்திய அரசு உதவி செய்யும். பெங்களூருவில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. பெங்களூருவில் மெட்ரோ ரெயில் பணிகள் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பெங்களூரு மெட்ரோ நற்பெயரை ஈட்டியுள்ளது. நாட்டின் முக்கிய வணிக நகரங்களில் பெங்களூவும் ஒன்று.

60 கோடியாக அதிகரிக்கும்

  சர்வதேச தரத்தில் கல்வி, ஆராய்ச்சி, மருத்துவ கல்லூரிகள் பெங்களூருவில் உள்ளன. நாடு சுதந்திரம் அடைந்தபோது மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் நகரங்களில் வசித்தனர். இது வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 60 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் நகரங்களில் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ.1.57 லட்சம் கோடி செலவழித்துள்ளது.
  இவ்வாறு ஹர்தீப்சிங்புரி பேசினார்.
  இந்த விழாவில் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், வீட்டு வசதித்துறை மந்திரி சோமண்ணா, தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று முதல்...

  இந்த நீட்டிப்பு பாதையில் ராஜராஜேஸ்வரிநகர், ஞானபாரதி, பட்டனகெரே, கெங்கேரி சேட்டலைட் பஸ் நிலையம், கெங்கேரி ஆகிய 5 இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாயண்டஹள்ளி-கெங்கேரி பாதையில் இன்று (திங்கட்கிழமை) முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

  காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சேவை, 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மைசூரு ரோட்டில் வாகன நெரிசல் குறைந்து வாகனங்கள் எளிதாக செல்லும் நிலை ஏற்படும்.
-
விழாவில் கன்னடம் புறக்கணிப்பு

மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா கெங்கேரி சேட்டிலைட் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்றது. இந்த விழா குறித்த தகவல் பலகையில் ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. கன்னடம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருந்ததை கண்டு கன்னட மொழி ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 

மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பில் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ரோ ரெயில் பாதை நீளம் 56 கிலோ மீட்டர்

பெங்களூருவில் நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டு இருப்பதன் மூலம் மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் அதிகரித்துள்ளது. 

அதாவது மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் பையப்பனஹள்ளி முதல் கெங்கேரி வரை (பர்பிள் லைன்) 25.60 கிலோ மீட்டர் நீளமும், நாகசந்திரா முதல் அஞ்சனபுரா வரை 30.45 கிலோ மீட்டர் நீளம் என மொத்தம் 56.05 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது. பெங்களூருவில் முதல் முதலாக கடந்த 2011-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்