திருத்தணி அருகே செம்மரம் வெட்ட சென்ற 5 பேர் கைது

திருப்பதிக்கு செம்மரம் வெட்ட சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை திருத்தணி அருகே போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-31 12:44 GMT
வாகன சோதனை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நகர் என்ற இடத்தில் திருத்தணி போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் திருப்பதியை நோக்கி அதிவேகமாக சென்ற சொகுசு காரை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. சற்று தூரம் சென்றதும் கார் நின்றது. அப்போது கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

கைது
போலீசார் உடனடியாக அந்த காரை மடக்கி காருக்குள் இருந்த 5 பேரையும் பிடித்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். சொகுசு காரை போலீசார் கைப்பற்றினர். சொகுசு காரில் வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியை சேர்ந்த குமார், குப்புசாமி, கமலநாதன் பிரகாஷ், முருகேசன் என்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வேண்டும் என்று ஒரு நாளைக்கு ரூ.1,000 கூலி கொடுப்பதாக தரகர்கள் அழைத்து சென்றனர். காரில் இருந்து தப்பி ஓடியவர் முக்கிய தரகர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் திருத்தணி வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5-க்கும் மேற்பட்ட கத்தி, மரம் அறுக்கும் எந்திரம், ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் போன்றவற்றை காரில் வைத்திருந்தனர். பொருட்களையும் சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 5 நபர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்