குழந்தையை கடத்த முயன்ற 2 பெண்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு

கிருஷ்ணகிரி அருகே குழந்தையை கடத்த முயன்ற 2 பெண்களுக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2021-08-31 17:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி லைன் கொல்லை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 33). கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி சத்தியராஜின் வீட்டிற்கு வந்து பர்கூர் அடுத்த சக்கில் புதூர் பகுதியை சேர்ந்த அலமேலு (25) மற்றும் சீதா (30) ஆகியோர் தங்கள் பகுதியில் கட்டப்படும் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு கூறினார்கள்.

அதற்கு சத்தியராஜின் மனைவி மறுப்பு தெரிவித்து வீட்டிற்குள் சென்ற நேரத்தில் வெளியில் விளையாடிய அவரது 2 வயது குழந்தையை கடத்தி செல்ல முயன்றனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்கள் 2 பேரையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

10 ஆண்டு சிறை தண்டனை 

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதன்படி குழந்தையை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அலமேலு, சீதா ஆகிய 2 பேருக்கும் தலா, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதமும், இதை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்