வேலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

வேலூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர்.

Update: 2021-09-02 01:00 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். தொரப்பாடி அரசுப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவு காரணமாக நேற்று முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும பள்ளிகள் திறக்கப்பட்டது. கல்லூரிகளும் திறக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பின்னர் நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள்  உற்சாகத்துடன் வருகை புரிந்தனர். மாணவ-மாணவிகள் பலர் காலையில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பள்ளிகளுக்கு சென்றனர்.
 
மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் ரோஜாப்பூ மற்றும் சாக்லேட் வழங்கி வரவேற்றனர். பள்ளிகளின் நுழைவுவாயிலில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. அனைவரும் முககவசம் அணிந்து வந்தனர். சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறையில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்கள், ஆசிரியர்கள் முககவசம் அணிந்துள்ளார்களா?, சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனரா என்று பார்வையிட்டார். மாணவர்களிடம் தங்கள் பெற்றோரிடம் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கூறினார். 

ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி மற்றும் பலர் உடனிருந்தனர். வேலூர் மாவட்டத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் 66 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 78 சதவீதம் பேரும், பிளஸ்-1 வகுப்பு மாணவர்கள் 60 சதவீதம் பேரும், பிளஸ்-2 மாணவர்கள் 81 சதவீதம் பேரும் பள்ளிக்கு வருகை தந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கலைக்கல்லூரியில் சுழற்சி முறையில் 2, 3-வது ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்கின. கல்லூரிக்கு வந்த மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா என்று கல்லூரி நுழைவு வாயிலில் சோதனை செய்யப்பட்டது. இதேபோன்று மாவட்டத்தில் உள்ள 1,007 அங்கன்வாடி மையங்களுக்கும் குழந்தைகள் ஆர்வத்துடன் சென்றனர். 5 மாதங்களுக்கு பின்னர் மாணவர்கள் தங்களது நண்பர்களை சந்தித்ததால் ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் பேசி கொண்டனர்.

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் உற்சாகமாக வருகை புரிந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 90 சதவீதம் மாணவர்கள் வருகை புரிந்திருந்தனர்.

மேலும் செய்திகள்