சாலை வசதி செய்து தரக்கோரி அரசு பஸ் சிறைபிடிப்பு-நாற்று நட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்

சாலை வசதி செய்து தரக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள் சாலையில் நாற்று நட்டும் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-09-02 17:32 GMT
நல்லம்பள்ளி:
பஸ் சிறைபிடிப்பு
நல்லம்பள்ளி அருகே மிட்டாதின்னஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட அங்கணாம்புதூர் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் அரசு பள்ளி ஒன்று உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. மேலும் மழைபெய்தால் சகதிக்காடாகவும் மாறிவிடுகிறது. 
இதனால் பழுதான இ்ந்த சாலையை சீரமைத்து தரக்கோரி, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் நேற்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் ஒன்றை சிறைபிடித்தும், பழுதான சாலையில் நாற்று நட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அதிகாரிகள் உறுதி
அப்போது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சிறைபிடித்த அரசு பஸ்சை விடுவித்ததுடன், நாற்று நடும் போராட்டத்தையும் பொதுமக்கள் கைவிட்டனர்.

மேலும் செய்திகள்