குழந்தைகள் நலக்குழு தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-02 20:06 GMT
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 நியமனம்
இளைஞர் நீதி சட்டம் 2015 மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பிட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இந்த குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
 தகுதி
குழந்தைகள் உளவியல் அல்லது மனோதத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கல்வியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சுகாதாரம் கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர்.அல்லது உளவியல் அல்லது மனோதத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகவியல் மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
 மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு குறையாதவர்களாகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவர்களாகவும் இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவராவர். தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.ஒரு நபர் ஒரு மாவட்டத்தில் குழந்தை பராமரிப்பு பணியில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் நியமனத்துக்கு தகுதியற்றவர்.
விண்ணப்பம்
இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது இதற்கான இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கொண்ட பதவிக்கு அதற்கான படிவத்தில் செய்தி வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வ.உ.சி. நகர், சூலக்கரை மேடு, விருதுநகர் என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறும் வகையில் விண்ணப்பிக்கலாம்.
 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும்.இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
 இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்