கள்ளக்குறிச்சி கலெக்டர் கண் எதிரே தந்தையுடன் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி கலெக்டர் கண் எதிரே தந்தையுடன் பட்டதாரி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-09-03 17:34 GMT
கள்ளக்குறிச்சி

பட்டதாரி பெண்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியை சேர்ந்த 23 வயது பட்டதாரி பெண் அவரது தந்தையுடன் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது ஆய்வுக்காக வெளியே சென்ற கலெக்டர் ஸ்ரீதர் காரில் உள்ளே வந்துகொண்டிருந்தார். அவருக்கு முன்னால் அவரது பாதுகாவலர் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகியோர் காரில் வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணும், அவரது தந்தையும் திடீரென கேனில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டரின் பாதுகாவலர் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகியோர் ஓடி சென்று அவர்கள் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி இருவரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினர்.  

திருமணம் செய்ய மறுப்பு

விசாரணையில் அந்த பெண்ணுக்கும், எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மகன் நாகராஜ்(28) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகவும், அப்போது ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணிடம் நாகராஜ் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும், பின்னர் அவர் திருமணம் செய்ய மறுத்ததாகவும் இதனால் மனமுடைந்த அந்த பெண் தனது தந்தையுடன் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. 

இதுபற்றி தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி அந்த பெண்ணையும், அவரது தந்தையையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார். தந்தையுடன், பட்டதாரி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் செய்திகள்