பெலகாவி, உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பெலகாவி, உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Update: 2021-09-03 20:37 GMT
பெங்களூரு:

மாநகராட்சிகளுக்கு தேர்தல்

  கர்நாடகத்தில் காலியாக இருந்த பெலகாவி, உப்பள்ளி-தார்வார், கலபுரகி ஆகிய 3 மாநகராட்சிகளுக்கான பதவிக்காலம் நிறைவு பெற்றிருந்தது. இதையடுத்து, அந்த 3 மாநகராட்சிகளுக்கும் செப்டம்பர் 3-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்திருந்தது. உப்பள்ளி-தார்வாரில உள்ள 82 வார்டுகள், கலபுரகியில் உள்ள 55 வார்டுகள், பெலகாவி மாநகராட்சியில் உள்ள 58 வார்டுகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

  இந்த தேர்தலில் பெலகாவி மாநகராட்சியில் 385 வேட்பாளர்களும், உப்பள்ளி-தார்வாரில் 420 வேட்பாளர்களும், கலபுரகி மாநகராட்சியில் 300 வேட்பாளர்களும் என ஒட்டு மொத்தமாக 1,105 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுபோல், தொட்டபள்ளாப்புரா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள நகரசபை வார்டுகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றிருந்தது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப்பதிவு

  நேற்று காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணிவரை 3 மாநகராட்சி பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. பெலகாவி, கலபுரகி, உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றினார்கள். குறிப்பாக இளம் வயதினர் ஆர்வமுடன் வந்து ஓட்டுப்போட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இளம் வயதினர் உள்பட வயதானவர்கள் வரை ஆர்வமுடன் வந்து வாக்களித்துவிட்டு சென்றார்கள்.

  பெலகாவி மாநகராட்சியில் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. இதன் காரணமாக பெலகாவி மாநகராட்சி தேர்தலில் உள்ள வாக்குச்சாவடிகளில் காங்கிரஸ், பா.ஜனதா தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவ்வாறு குவிந்திருந்த கட்சி தொண்டர்கள் இடையே லேசான தகராறும் உண்டானது.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  கொரோனா சந்தர்ப்பத்தில் 3 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் நடந்ததால், வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களின் கையில் கிருமி நாசினி தௌித்தும், அவர்கள் உடல் வெப்ப நிலையை அறிய சோதனை நடத்தியும் ஓட்டுப்போடுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். வாக்குச்சாவடி முன்பு வாக்காளர்கள் சமூக இடைவெளியுடன் நிற்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தது. சில வாக்குச்சாவடிகள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டும், பலூன்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தது.

  வாக்குச்சாவடிகள் முன்பு வேட்பாளர்கள் பூஜை செய்தும் வழிபட்டதை காண முடிந்தது. காலையில் இருந்தே 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமாக வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று ஓட்டுப் போட்டு விட்டு சென்றனர். பெலகாவி மாநகராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ. ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையாற்றினார். அப்போது சில வார்டுகளில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய ஓட்டு சீட்டை பா.ஜனதாவினர் வழங்கி வருவதாக அவர் குற்றச்சாட்டு கூறினார்.

அமைதியாக நடந்தது

  இதற்கிடையில், பெலகாவி மாநகராட்சி தேர்தலில் வாக்காளர்களை கவருவதற்காக நேற்று காலையில் பெலகாவி டவுனில் இருந்து சகபுரா பகுதி வரையில் உள்ள வீடுகள் முன்பாக துண்டு பிரசுரங்களை வீசி இருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜனதா, காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 3 மாநகராட்சிகளுக்கும் நடந்த தேர்தலில் ஒரு சில அசம்பாவிதங்கள் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. பெரிய அளவில் எந்த குற்றங்களும் நடைபெறவில்லை.

  கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணிவரை ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டு இருந்தனர். 3 மாநகராட்சிகளுக்கும் நடந்த தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 3 மாநகராட்சிக்கு நடந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்