அறுந்துபோன காற்றாடியை பிடிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவர் பலி

அறுந்துபோன காற்றாடியை பிடிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 6-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-09-05 03:57 GMT
பூந்தமல்லி,

மதுரவாயல் கோவில்பட்டி கோபாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் நடராஜ். இவருடைய மகன் கிஷோர் (வயது 11). அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் இவருடைய பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த கிஷோர், மாலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் மாடியில் காற்றாடி பறக்கவிட்டு விளையாடிக்கொண்டு இருந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது காற்றாடி நூல் அறுந்துபோனது. இதனால் அறுந்துபோன காற்றாடியை கிஷோர் எட்டிப்பிடிக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த மின்சார வயரில் அவரது கால் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மாணவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவர் கிஷோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர்

அதேபோல் மாங்காடு, காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (35). சிவில் என்ஜினீயரான இவர், நேற்று பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கத்தில் காவலாளிகள் தங்கும் குடிசையில் மின்விசிறி மாட்டும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்