ரூ.20 லட்சம் கள்ளநோட்டுகளுடன் 2 பேர் கைது

உத்தமபாளையம் அருகே ரூ.20 லட்சம் கள்ளநோட்டு வைத்திருந்த ஆம்னி பஸ் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-05 16:16 GMT
உத்தமபாளையம்: 

கள்ளநோட்டு கும்பல் 
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டி பகுதியில், கள்ள நோட்டுகளுடன் ஒரு கும்பல் சுற்றித் திரிவதாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மாயன் தலைமையில் போலீசார் நேற்று உத்தமபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது ஆனைமலையன்பட்டி வெள்ளைக்கரடு தனியார் பள்ளிக்கூடம் அருகே, சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர்.

ரூ.20 லட்சம் பறிமுதல்
 இதையடுத்து அவர்களிடம் இருந்த 2 பைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.20 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது. அவை ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகளாக இருந்தன. அந்த ரூபாய் நோட்டுகள் அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. 
இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கள்ள ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

2 பேர் கைது 
விசாரணையில் அவர்கள், கம்பம் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்த கண்ணன் (வயது 43), ஆனைமலையன்பட்டியை சேர்ந்த அலெக்சாண்டர் (45) என்று தெரியவந்தது. 
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். கைதான கண்ணன் ஆம்னி பஸ்சில் டிரைவராக உள்ளார். அலெக்சாண்டர் ஆட்டோ டிரைவர் ஆவார்.  

மேலும் கள்ளநோட்டுகள் அவர்களுக்கு எங்கிருந்து வந்தது?, கேரள மாநிலத்தில் சமீபத்தில் சிக்கிய கள்ளநோட்டு கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.20 லட்சம் கள்ள நோட்டுகளுடன் 2 பேர் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்