களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

Update: 2021-09-05 20:23 GMT
களக்காடு:
களக்காடு தலையணையில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

தலையணை

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை 2-ம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள், செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வந்ததை அடுத்து அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
இதையடுத்து 4 மாதங்களாக மூடப்பட்ட தலையணை கடந்த 4-ந் தேதி திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தலையணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதிய வண்ணம் உள்ளது.

ஆனந்த குளியல்

விடுமுறை தினமான நேற்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் பல ஊர்களிலும் இருந்து வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணையில் ஆனந்தமாக குளியல் நடத்தினர். முன்னதாக வனத்துறை சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வனத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர். தலையணைக்கு செல்ல காலை 9 மணி முதல் மாலை 3-30 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்