தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சி.ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் 15 நாட்கள் தூய்மை பணி அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் நடைபெற்றது.

Update: 2021-09-06 02:52 GMT
சென்னை,

சென்னை வடக்கு சி.ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் முதன்மை ஆணையர் அலுவலகமானது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த ஆகஸ்டு 16-ந் தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை 15 நாட்களுக்கு தூய்மை பணிகளை மேற்கொண்டது.

இந்த தூய்மை பணியை கூடுதல் ஆணையர் பி.ஜெயபால சுந்தரி கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி வைத்தார். அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களும், தூய்மை உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர். பின்னர் அலுவலக தகவல்களுக்கு காகிதத்தை பயன்படுத்தாமல் எலக்ட்ரானிக் ஊடகங்களை பயன்படுத்தும்படி முதன்மை ஆணையர் விடுத்த வேண்டுகோளை கூடுதல் ஆணையர் ஏ.கிளடஸ் சுட்டிக்காட்டினார்.

இந்த 15 நாள் நிகழ்ச்சியில் சென்னை வடக்கு சி.ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் முதன்மை ஆணையரக அலுவலக வளாகம், அண்ணா நகர் 4, 7, 11 மற்றும் 12-வது தெருக்கள், சாந்தி காலனி, அம்பத்தூர் ஆரம்ப பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் ஆணையரகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், கடந்த மாதம் 25-ந் தேதி மரக்கன்று நடும் நிகழ்ச்சியிலும் ஆணையரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதோடு, கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, உயிரி-கழிவு சிதைவு ஆலை ஆகியவை அலுவலக வளாகத்தில் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்