விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

Update: 2021-09-09 20:09 GMT
பெரம்பலூர்:

இன்று கொண்டாடப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
சதுர்த்தியன்று 2 அடி வரையிலான விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு நடத்தவும், பின்னர் தனி நபராக அந்த சிலையை எடுத்துச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம். அல்லது வீட்டில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலையை அருகே கோவில்கள் முன்பு வைத்தால், அவற்றை இந்து சமய அறநிலையத்துறையினர் சேகரித்து நீர்நிலைகளில் கரைப்பார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு வடிவங்களில் சிலைகள்
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்துவதற்காக, சிலைகள் வாங்கினர். இதனால் பெரம்பலூரில் விநாயகர் சிலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள கடைவீதிகளில் உள்ள கடைகளில் சதுர்த்தியை முன்னிட்டு கால் அடி முதல் 2 அடி வரையில் பல்வேறு வடிவங்களில் பல வர்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களும் ஆர்வத்துடன் விநாயகர் சிலையை தேர்வு செய்து வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்களையும் கடைவீதிகளில் வாங்கிச்சென்றனர்.
வீடுகளில் வைத்து வழிபாடு
இது தொடர்பாக விநாயகர் சிலை விற்பனையாளர்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதில் அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருப்பதால் விற்பனை பாதிக்கப்பட்டது. ஆனாலும் அரசின் உத்தரவை நாங்கள் மதித்து, வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்கு ஏற்றவாறு சிறிய அளவிலான விநாயகர் சிலையை விற்பனை செய்து வருகிறோம். இந்த சிலைகள் அனைத்தும் ரசாயன கலவையற்ற கிழங்கு மாவு, காகித கூல் ஆகியவற்றால் செய்யப்பட்டவை. இதனை கரைத்தால் நீர் நிலைகள் மாசுபடாது, என்றனர்.

மேலும் செய்திகள்