திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை

திருச்செந்தூர் கோவிலில் 3 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-10 14:46 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு நேற்று முதல் 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அனுமதி இல்லை
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும் கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றது.
கோவிலுக்கு செல்லும் பாதைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
எளிமையாக நடந்த திருமணங்கள்
விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருமணம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆனால் அங்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோவில் முன்பு புதுமண ஜோடிகள் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வடக்கு டோல்கேட் அருகில் நின்று கோபுர தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.
தொடர்ந்து நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் மீண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்