தடையை மீறி விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த இந்து முன்னணியினர் 50 பேர் கைது

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த இந்து முன்னணி அமைப்பினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-10 16:46 GMT
வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த இந்து முன்னணி அமைப்பினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா

நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும், அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும் அறிவுறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதை தடுக்க கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விநாயகர் சிலைகள் வைத்து இந்து முன்னணியினர் வழிபாடு நடத்த உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கருணாகரன், சீனிவாசன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
பொதுஇடத்தில் வழிபாடு

இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகம் அருகே நண்பகல் 12 மணியளவில் கூடினர். ஆட்டோவில் 3 விநாயகர் சிலைகள் கொண்டு வந்து, அவற்றை ஆஞ்சநேயர் கோவில் முன்பு வைத்து தேங்காய் உடைத்தனர். பின்னர் கற்பூரம் ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 3 விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தடைவிதித்த தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

50 பேர் கைது-சிலைகள் பறிமுதல்

பின்னர் 3 விநாயகர் சிலைகளையும் இந்து முன்னணியினர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதனால் இந்து முன்னணியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் 3 விநாயகர் சிலைகளையும் பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

அப்போது போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து தடையை மீறி பொதுஇடத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தியதாக கோட்ட தலைவர் மகேஷ் உள்பட 50 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணீர் விட்டு கதறி அழுத சிறுவன்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆஞ்சநேயர் கோவில் முன்பு வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் இந்து முன்னணியினரிடம் இருந்து பறிமுதல் செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனை ஆஞ்சநேயர் கோவில் அருகே நின்று பார்த்து கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் திடீரென கண்ணீர் விட்டு கதறி அழுதான். அந்த சிறுவனை சக நண்பர்கள் ஆறுதல்படுத்தினர்.

மேலும் செய்திகள்