விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலேயே அமைதியாக நடந்தது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலேயே அமைதியாக நடந்தது.

Update: 2021-09-10 18:28 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வீடுகளிலேயே அமைதியாக நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய சிலைகளை வைத்து வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

அதன்படி நேற்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் சிறிய அளவிலான களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வாங்கி சென்று கொழுக்கட்டை, சுண்டல் முதலியவற்றை விநாயகருக்கு ைவத்து வீட்டிலேயே வழிப்பட்டனர்.

பெரிய சிலைகள் வைத்து பொது இடங்களில் வழிபாடு நடைபெறாததால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடக்கும் பொரி, பழ வியாபாரம், விநாயகர் சிலைகள் வியாபாரம் ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை. மொத்தத்தில் விநாயகர் சதுர்த்தி விழா எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி வீடுகளிலேயே அமைதியாக நடந்தது.

அரக்கோணம்

அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் தடையை மீறி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விரைந்து வந்து, இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற இந்து முன்னணியினர் வடமாம்பக்கம் ஏரிக்கரை அருகில் உள்ள ஒரு கிணற்றில் கரைத்தனர். 

அதில் பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் பாபாஸ் பாபு, முன்னாள் மாவட்ட ஓ.பி.சி. பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி துணைத் தலைவர் இன்பா, மாவட்ட வர்த்தக அணி செந்தில் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கருமான் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்