பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலின் முன்பு ஒரே நாளில் 21 திருமணங்கள்

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலின் முன்பு ஒரே நாளில் 21 திருமணங்கள் நடந்தன.

Update: 2021-09-10 20:15 GMT
பெரம்பலூர்:

கோவில்கள் மூடப்பட்டிருந்தன
ஆவணி மாதத்தில் சுப நிகழ்ச்சிகள், ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை, ஆவணி மாத கடைசி சுப முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான சுப நிகழ்ச்சிகள், புதிய கடைகள் திறப்பு விழா நடைபெற்றது.
திருமணங்கள் பெரும்பாலும் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களில் கோவில்கள் மூடப்பட்டு காட்சியளிக்கிறது. அதன்படி நேற்று கோவில்கள் மூடப்பட்டு காட்சியளித்தன.
ஒரே நாளில் 21 திருமணங்கள்
இதனால் கோவில்களில் நடத்த அனுமதி பெற்றிருந்த திருமணங்கள் அனைத்தும், கோவிலின் முன்பு எளிய முறையில் நடந்தது. அதன்படி பெரம்பலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலின் முன்பு மட்டும் நேற்று ஒரே நாளில் 21 திருமணங்கள் நடைபெற்றன.
இதில் 20 திருமணங்கள் கோவிலில் முறைப்படி அனுமதி பெற்றும், ஒரு திருமணம் அனுமதியின்றியும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை
கோவிலின் முன்பு அதிகாலை முதல் காலை 10 மணி வரை அடுத்தடுத்த திருமணங்கள் நடைபெற்றதாலும், அவர்களின் உறவினர்களின் கூட்டத்தாலும் கோவில் விழாக்கோலம் பூண்டது போன்று காணப்பட்டது. ஆனால் அந்த திருமணங்களில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் சுபமுகூர்த்த நாள் என்பதால் மதனகோபாலசுவாமி கோவிலில் 11 திருமணங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்