எலியை பிடித்து வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த விவசாயி

நெல் வயலில் அட்டகாசம் செய்யும் எலியை பிடித்து வந்து விநாயகருக்கு விவசாயி ஒருவர் சிறப்பு பூஜை செய்த வினோத சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது.

Update: 2021-09-11 21:46 GMT
சிக்கமகளூரு: நெல் வயலில் அட்டகாசம் செய்யும் எலியை பிடித்து வந்து விநாயகருக்கு விவசாயி ஒருவர் சிறப்பு பூஜை செய்த வினோத சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. 

எலி தொல்லை

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா மார்சல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில், அவருடைய நெல் வயலில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதாக தெரிகிறது. அந்த எலிகள் நெற் பயிரை தின்று நாசம் செய்து வந்துள்ளன. இதனால் எலிகளின் அட்டகாசத்தை தடுக்க முடியாமல் ரமேஷ் அவதிப்பட்டு வந்தார். 

இதன்காரணமாக அவருக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்று ரமேஷ் பயந்தார். ஆனால் அந்த எலிகளை கொல்ல ரமேசுக்கு மனது வரவில்லை. இந்த நிலையில், எலிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வித்தியாசமான முயற்சியை ரமேஷ் கையில் எடுத்துள்ளார். 

விநாயகருக்கு சிறப்பு பூஜை

அதாவது, விநாயகரின் வாகனமாக எலி கருதப்படுகிறது. இதனால் எலியை பிடித்து வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டால் எலி தொல்லை நீங்கும் என்று ரமேஷ் கருதி உள்ளார். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அந்தப்பகுதியில் உள்ள கோவிலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ரமேஷ், தனது விவசாய நிலத்துக்கு சென்று நெல் வயலில் அட்டகாசம் செய்து வந்த ஒரு எலியை பிடித்து பையில் போட்டு விநாயகர் கோவிலுக்கு சென்றார். 

அங்கு அந்த பையை வைத்து, விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதாவது, நெல் வயலில் இனி எலி தொல்லை இருக்கக்கூடாது என்று வேண்டினார். இதையடுத்து அவர் பையில் பிடித்து வைத்திருந்த எலியை விநாயகர் சிலை முன்பு விட்டார். அந்த எலி பையில் இருந்து வெளியே வந்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அதன்பின்னர் ரமேஷ், தனது வேண்டுகோளை விநாயகரிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

நெல் வயலில் அட்டகாசம் செய்யும் எலிகளை கொல்லாமல், அதனை பிடித்து வந்து விநாயகர் சிலை முன்பு வைத்து விவசாயி சிறப்பு பூஜை செய்து வழிபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்