பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் 22 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைப்பு

பெங்களூரு மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் 22 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

Update: 2021-09-12 20:54 GMT
பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தி

  கொரோனா பரவல் காரணமாக பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது. அதாவது விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலை வைப்பவர்கள் 5 நாட்கள் மட்டுமே சிலையை வைத்து வழிபட வேண்டும் என்றும், அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கும் தடை விதித்திருந்தது.

  வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை கரைக்க மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் கடந்த 10-ந் தேதியே 93 ஆயிரத்து 524 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு இருந்தது.

ஒரே நாளில் 22 ஆயிரம் சிலைகள் கரைப்பு

  இந்த நிலையில், பெங்களூரு நகரில் உள்ள 8 மண்டலங்களிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 22 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  இவற்றில் அதிக பட்சமாக தெற்கு மண்டலத்தில் 9 ஆயிரத்து 204 விநாயகர் சிலைகளும், மேற்கு மண்டலத்தில் 7 ஆயிரத்து 614 சிலைகளும், கிழக்கு மண்டலத்தில் 1,497 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டுள்ளன. தெற்கு மண்டலத்தில் உள்ள எடியூர் ஏரியில் மட்டும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 7,100 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்