தொழிலாளியை நூதனமுறையில் ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.88 ஆயிரம் மோசடி

தொழிலாளியை நூதனமுறையில் ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.88 ஆயிரம் மோசடி செய்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-09-12 21:47 GMT
விக்கிரமங்கலம்:

பணம் எடுக்கச்சென்றார்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வெளிப்பிரிங்கியம் கிராமம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் தனபால்(வயது 65). தனியார் நிறுவன தொழிலாளியான இவர் கடந்த 7-ந் தேதி மதியம் சொந்த தேவைக்காக பணம் எடுக்க வி.கைகாட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது அந்த மையத்தின் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்களிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது அந்த வாலிபர்கள், தனபாலிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பெற்று ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயன்றதுபோல் நடித்துள்ளனர். பின்னர் அந்த எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறி, தனபால் கொடுத்த ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக தாங்கள் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதையடுத்து தனபால், அந்த ஏ.டி.எம். கார்டுடன் வீட்டிற்கு சென்றார்.
நகைகள் வாங்கினர்
இந்நிலையில் அந்த வாலிபர்கள், தனபாலின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அரியலூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுத்துள்ளனர். பின்னர் அரியலூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று, அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.38 ஆயிரத்திற்கு நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து தனபாலின் செல்போனுக்கு, அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.88 ஆயிரம் எடுக்கப்பட்டது குறித்த குறுந்தகவல் வந்தது. அதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தனபாலின் மகன் ராஜ்குமார் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தொழிலாளியை நூதன முறையில் ஏமாற்றி ஏ.டி.எம். கார்டு மூலம் பணமோசடியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்