சாலையை கடந்த தொழிலாளி கார் மோதி பலி. மேம்பாலம் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிகொண்டா அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார்மோதி பலியானார். இதனால் மேம்பாலம் கட்டக்கோரி பிணகத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-13 17:37 GMT
அணைக்கட்டு

பள்ளிகொண்டா அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார்மோதி பலியானார். இதனால் மேம்பாலம் கட்டக்கோரி பிணகத்துடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கார்மோதி பலி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி கிராமத்தைச் சேர்ந்தவர்  துரைமுருகன் (வயது 52). திருமணமாகாத இவர் பீடி தொழில் செய்து வந்தார். நேற்று காலை கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஓட்டலில் சாப்பிடுவதற்காக சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து பெங்களூரை நோக்கி அதிவேகமாக வந்த கார் துரைமுருகன் மீது மோதியது. இந்த விபத்தில் துரைமுருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுபற்றி தகவலறிந்ததும் அவருடைய உறவினர்கள், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் துரைமுருகனின் உடலை சூழ்ந்து கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

மேம்பாலம் கட்டவேண்டும்

தகவலறிந்ததும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுபலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிடாததால் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப்பகுதியில் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து உயிரிழப்பு ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு கந்தனேரிபகுதியிலும், வெட்டுவானம் பகுதியிலும் மேம்பாலம் கட்டுவதற்கான வரைவு திட்டம் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் விரைவில் பாலம் கட்டுவதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகும் போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்