டிராக்டர் டிப்பர் மீது வேன் மோதல்; 19 பெண் தொழிலாளர்கள் காயம்

வளவனூர் அருகே டிராக்டர் டிப்பர் மீது வேன் மோதிய விபத்தில் 19 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

Update: 2021-09-13 17:38 GMT
வளவனூர், 

விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் மற்றும் ஒரு கோடி கிராமத்தை சேர்ந்த பெண்கள், புதுச்சேரி திருவாண்டார் கோவில் பகுதியில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்காக இவர்கள் தினமும் காலையில் ஒரு வேனில் கம்பெனிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். 
அதன்படி நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்கள் மாலையில் ஒரு வேனில் ஊருக்கு புறப்பட்டனர். அந்த வேனை திருபுவனை பெரிய தோப்பு தெருவை சேர்ந்த ரவிக்குமார்(வயது 29) என்பவர் ஓட்டினார். 

டிராக்டர் மீது மோதல் 

வளவனூர் அருகே பனங்குப்பத்தில் வந்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் டிப்பர் மீது வேன் மோதியது. இந்த விபத்தில் கப்பூரை சேர்ந்த ஜெயபாலன் மனைவி தேவசுந்தரி(34), கோவிந்தராஜ் மனைவி செல்வி(40), கலைராஜா மனைவி லட்சுமி(35), சுபஸ்ரீ(35), கனகஜோதி(23), சக்கரவர்த்தி மனைவி சுஷ்மிதா(32), கங்காதரன் மனைவி மலர்(35), வீரன் மனைவி தனம்(30), சுதா(25), லலிதா(32), ரம்யா(17), சத்யா(32), பொன்னி(32), உமையாள்(32), புனிதவள்ளி(42), அம்சவள்ளி(27), கோவிந்தம்மாள்(35), சித்ரா(38), ஒரு கோடி கிராமத்தை சேர்ந்த அய்யனார் மனைவி கங்கா(41) ஆகியோர் காயமடைந்தனர்.

19 பெண்கள் காயம் 

இது பற்றி தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த 19 பெண்களையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 
அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தேவசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி்னறனர்.

மேலும் செய்திகள்