நரிக்குறவர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-13 17:56 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர்
காத்திருப்பு போராட்டம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி மனு கொடுப்பதற்காக நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து வளாகத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது அதிகாரிகள் யாரும் அவர்களை கண்டுகொள்ளவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மாலையில் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உருண்டு, புரண்டனர்
அவர்களில் சிலர் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அங்கும், இங்கும் உருண்டு, புரண்டும், போலீசாரின் கால்களை பிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் தேன்கொடி என்ற பெண் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், எறையூரில் 120 நரிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். 46 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாவட்டமாக திருச்சி இருந்தபோது, அப்போதைய கலெக்டர் எங்களுக்கு எறையூர் பகுதியில் விவசாயம் செய்ய ஒரு குடும்பத்தினருக்கு தலா 2 ஏக்கர் முதல் 2½ ஏக்கர் வரையிலான நிலங்களை ஒதுக்கி கொடுத்தார்.
பட்டா வழங்க வேண்டும்
ஆனால் இதுவரைக்கும் அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நாங்கள் பலமுறை மனு கொடுத்தோம். இன்னும் பட்டா வழங்குவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஆனாலும் நாங்கள் அந்த நிலங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த நிலங்களை நாங்கள் விவசாயம் செய்வதற்காக டிராக்டரை கொண்டு உழவு செய்த போது வருவாய்த்துறையினர் தடுத்ததால், தற்போது விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே கலெக்டர் அந்த நிலங்களில் எங்களை விவசாயம் செய்ய உடனடியாக அனுமதிக்கவும், அந்த நிலங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
கலெக்டர் பேச்சுவார்த்தை
மேலும் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்க கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த கலெக்டர் ஸ்ரீவெங்டபிரியா உடனடியாக வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் இது தொடர்பாக உங்கள் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து நரிக்குறவர்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு, கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்