விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநாவலூர் அருகே விவசாயி கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-09-13 17:58 GMT
விழுப்புரம், 
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள கொரட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி மாரிமுத்து. இவர் இறந்ததையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரும காரியம் நடந்தது. இதில் உறவினர்களான  பெரும்பாக்கத்தை சேர்ந்த சாமிக்கண்ணு மகன்கள் பக்கிரி(வயது 60), பாவாடை (57), கஜேந்திரன்(52), அர்ச்சுனன் மகன் குபேந்திரன் (35) ஆகியோர் கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்ச்சியில் ராமலிங்கத்தின் மருமகள் காளியம்மாள் பங்கேற்க கொரட்டூரை சேர்ந்த விவசாயி காசி(60) எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டார். இதை பக்கிரி உள்பட 4 பேரும் தட்டிக்கேட்டு, காசியை அடித்துக் கொலை செய்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்கிரி, பாவாடை, கஜேந்திரன், குபேந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். 

4 பேருக்கு ஆயுள் தண்டனை 

மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பு கூறினார். அவரது தீர்ப்பில் பக்கிரி, பாவாடை, கஜேந்திரன், குபேந்திரன் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலவன் ஆஜரானார். 

மேலும் செய்திகள்