மூதாட்டிக்கு 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பரபரப்பு

பொது மருத்துவ முகாம் என்று நினைத்து சென்ற மூதாட்டிக்கு 3-வது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-13 18:15 GMT
திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள விட்டலாபுரத்தை சேர்ந்தவர் கண்ணம்மா(வயது 70). இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி 2-வது டோஸ் போடப்பட்டது. இதில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அது பொது மருத்துவ முகாம் என்று நினைத்து சிகிச்சை பெறுவதற்காக கண்ணம்மா அங்கு சென்றார். பணியில் இருந்த மருத்துவக்குழுவினர் எதுவும் கேட்காமலேயே கண்ணம்மாவுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.  இது பற்றி அறிந்ததும் கண்ணம்மாவின் மகன் சிவக்குமார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், தனது தாயை அழைத்துக்கொண்டு திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு வந்தார். 
இதற்கிடையில் ஆய்வு செய்ய வந்திருந்த மாவட்ட கலெக்டர் மோகனிடம் தனது தாய்க்கு நடந்த விவரத்தை சிவக்குமார் கூறினார். உடனே கலெக்டர், டாக்டர்களை அழைத்து சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் என்றார். 
அனைத்தையும் கேட்ட டாக்டர்கள், 3-வது முறையாக தடுப்பூசி போட்டால் எதுவும் செய்யாது. 4 நாட்களுக்கு வெயிலில் நிற்க வேண்டாம். உடலில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் தங்களை நேரில் அனுகலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சிவக்குமார், தனது தாயை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்