தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-09-13 19:17 GMT
தென்காசி, செப்:

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படாமல், அங்குள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு சென்றனர். மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் மனுக்களை வழங்கினர்.
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜனதா அரசு தொடர்பு பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, மனு வழங்கினர். அதில், ‘பாரத பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் மனுக்களை வாங்குவதற்கு குடிசைமாற்று வாரிய நிர்வாகத்தினர் மறுக்க கூடாது. குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி கீழ வாலியன் பொத்தை பகுதியில் சாலை வசதி அமைத்து கொடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அடிப்படை வசதிகள்

திராவிடர் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன் தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு வழங்கினர். அதில், ‘கோவை மாவட்டம் அன்னூர் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் முத்துசாமி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும். தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். டெல்லியில் பெண் போலீஸ் அதிகாரி கொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனே தூக்கிலிட வேண்டும். பண்பொழி, கரிவலம், தன்னூத்து ஆகிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.
தென்காசி நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு வழங்கினர். அதில், ‘தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு 2-ம் தெரு பகுதியில் சாலை, குடிநீர், வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

நெல் கொள்முதல் நிலையம்

கடையநல்லூர் தாலுகா காசிதர்மத்தை சேர்ந்த விவசாயிகள் சார்பில் சின்னசாமி வழங்கி மனுவில், ‘கடந்த 2 மாதங்களாக அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்தது. தற்போது அது முடிந்து விட்டதாக அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே மீண்டும் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்