ஏட்டு குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திண்டுக்கல் அருகே விபத்தில் பலியான ஏட்டு குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2021-09-13 20:24 GMT
திண்டுக்கல்: 


போலீஸ் ஏட்டு பலி 
திண்டுக்கல் மாவட்டம் சிந்தலக்குண்டு அருகே உள்ள அலவாச்சிபட்டியை சேர்ந்தவர் ராஜூ (வயது 62). இவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு ஆவார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து ஊருக்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே வத்தலக்குண்டு சாலையில் குட்டியபட்டி பிரிவு பகுதியில் அவர் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், ராஜூவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜூவின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அரசு பஸ் ஜப்தி 
இதனை விசாரித்த நீதிபதி சரவணன், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ராஜூவின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்து 845 இழப்பீடாக வழங்கும்படி உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற ஒரு அரசு பஸ்சை, கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

மேலும் செய்திகள்