இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி கொலை

ராமநகர் அருகே இரும்பு கம்பியால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2021-09-13 20:51 GMT
ராமநகர்:

விவசாயி கொலை

  ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சாதுமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சேகவுடா, விவசாயி. இவரது மனைவி கவுரம்மா. நஞ்சேகவுடாவுக்கு கிராமத்தின் அருகே விவசாய தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அவர் தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் நஞ்சேகவுடாவை வழிமறித்து சண்டை போட்டதாக தெரிகிறது.

  இந்த நிலையில், திடீரென்று அந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பிகளால் நஞ்சேகவுடாவை சரமாரியாக தாக்கினார்கள். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினாா். உடனே அங்கிருந்து மர்மநபர்கள் ஓடிவிட்டனர். பின்னர் நஞ்சேகவுடாவை மீட்டு கிராமத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், நஞ்சேகவுடா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  முன்னதாக இதுபற்றி தகவல் அறிந்ததும் மாகடி போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கு சென்று நஞ்சேகவுடாவின் உடலை கைப்பற்றியும் விசாரித்தனர். அப்போது மாகடியில் உள்ள சவுடேஷ்வரி அம்மன் கோவிலுக்கு அருகே இருக்கும் நிலம் தொடர்பாக நஞ்சேகவுடாவுக்கும், வேறு ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்தது. இந்த நிலப்பிரச்சினை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  மேலும் நேற்று முன்தினம் விநாயகர் சிலை கரைப்பு விவகாரத்தில் நஞ்சேகவுடாவுக்கும் சில வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவும் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்