கோட்டுச்சேரியில் டீ கடைக்காரர் வீட்டில் ரூ.6.50 லட்சம் நகை, பணம் திருட்டு

கோட்டுச்சேரியில் டீ கடைக்காரர் வீட்டில் புகுந்து ரூ.6.50 லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

Update: 2021-09-14 17:11 GMT
கோட்டுச்சேரி, செப்.-
கோட்டுச்சேரியில் டீ கடைக்காரர் வீட்டில் புகுந்து  ரூ.6.50 லட்சம் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
நகை, பணம் திருட்டு
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் இளந்தேவன் (வயது 56). வீட்டின் அருகே டீ கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நிரவி பகுதியில் புதிதாக கட்டிவரும் வீட்டை பார்ப்பதற்காக இளந்தேவன் குடும்பத்தோடு சென்றார். 
 பின்னர் இரவு 9 மணிக்கு மேல் கோட்டுச்சேரி வீட்டுக்கு இளந்தேவன் திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 1 லட்சத்து 2 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.6.50 லட்சம் ஆகும்.
10 ரூபாய் நோட்டு
தகவல் அறிந்த கோட்டுச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இளந்தேவன், வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீடு புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நகை, பணத்தை சுருட்டிய மர்மநபர்கள், பீரோவில் 10 ரூபாய் நோட்டு ஒன்றை வைத்துவிட்டு சென்றுள்ளனர். 

மேலும் செய்திகள்