முதலை கடித்து தி.மு.க.பிரமுகர் சாவு

சிதம்பரம் அருகே முதலை கடித்து தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-09-14 19:56 GMT
அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அருகே பழையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 65). தி.மு.க. கிளை செயலாளரான இவர் நேற்று இரவு பழைய நல்லூர் கிராமத்தை ஒட்டியுள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது முதலை ஒன்று வந்தது. இதைபார்த்து அதிா்ச்சி அடைந்த அவர் அலறியடித்து கொண்டு ஆற்றில் இருந்து வெளியே வர முயன்றார். ஆனால் அந்த முதலை கோபாலகிருஷ்ணனை கடித்து தண்ணீருக்குள் இழுத்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் முதலையின் மீது கல் வீசி கோபாலகிருஷ்ணனை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்து சென்றது. 
இது குறித்த தகவலின் பேரில் தாசில்தார் ஆனந்த், சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான வீரர்கள், வனத்துறையினர் மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களுடன் சேர்ந்து படகு மூலம் கோபாலகிருஷ்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் முதலை கடித்ததில் வேளக்குடி பாலம் அருகே ஆற்றில் கோபாலகிருஷ்ணன் பிணமாக கிடந்தார். மேலும் உடல் அருகில் கிடந்தமுதலையை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கட்டையால் அடித்து விரட்டினர். பின்னர் கோபாலகிருஷ்ணன் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்