வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திட்டக்குடி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

Update: 2021-09-15 19:14 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (வயது 22). தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்தார். மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 
இந்த நிலையில் கடந்த 12.4.2019 அன்று அந்த சிறுமியை, சின்னதுரை மற்றும் அவரது நண்பர்கள் கீழ்ஆதனூர் மாயவேல், செவ்வேரியை சேர்ந்த பிரதாப், சரத்பாபு ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றனர்.
பின்னர் சின்னதுரையையும், அந்த சிறுமியையும் நண்பர்கள்  சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வந்தனர். இதை அறிந்த சின்னத்துரை, அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தொழுதூருக்கு வந்தார். இதை நோட்டமிட்ட போலீசார், அவர்களை பிடித்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

20 ஆண்டு சிறை தண்டனை

இதையடுத்து சிறுமியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சின்னதுரை, அதற்கு உடந்தையாக இருந்ததாக மாயவேல், பிரதாப், சரத்பாபு ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
அவர் தனது தீர்ப்பில், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக சின்னதுரைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனையை சின்னதுரை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
மாயவேல், பிரதாப், சரத்பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தீர்ப்பு வந்த 30 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டர், ரூ.5 லட்சம் அரசு சார்பில் நஷ்ட ஈடு தொகையை வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்