விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரம்

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிக்காக கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-09-20 17:22 GMT
விழுப்புரம்,

விழுப்புரம்- நாகப்பட்டினம் இடையே 194 கிலோ மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற கடந்த 2012&ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. 

இந்த 4 வழிச்சாலை திட்டம் சென்னை& திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் கூட்டுசாலையில் இருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை தொடங்குகிறது. 

இத்திட்டம் விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி

இந்த 4 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2018&ம் ஆண்டு தொடங்கியது. இந்த சாலைப்பணிக்காக மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது.

 இந்த நிதி மூலம் சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்.

இதையடுத்து விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மாநில எல்லை வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சீரமைக்கும் பணி கடந்த 2019&ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. 

இப்பணிகள் 4 ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் மக்களிடம் கருத்து கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதையடுத்து பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

கட்டிடங்களை அகற்றும் பணி தீவிரம்

இந்நிலையில் இப்பணிக்கான இடைக்கால தடை ரத்து செய்யப்பட்டதையடுத்து கடந்த ஜூலை மாதம் முதல் இப்பணிக்காக இடம் கையகப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மீண்டும் தொடங்கியுள்ளனர்.

விழுப்புரம் ஜானகிபுரத்திலிருந்து புதுச்சேரி வரை இடம் கையகப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதுபோல் ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருக்கும் பயிர்களை அகற்றி அந்த இடத்தை அளவீடு செய்யும் பணிகளும் நடந்து வருகிறது.

மேலும் விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் எம்.என்.குப்பத்தில் இருந்து மதகடிப்பட்டு வரையுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் இருக்கும் நிலங்கள், மனைகள் கையகப்படுத்தப்பட்டு அதில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள், கட்டிடங்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களை சமப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்