மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-20 18:58 GMT
கரூர்
ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ விலை உயர்வு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் கரூரில் தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயம் முன்பு மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரி சுப்பிரமணியன் தலைமையில் தி.மு.க.வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
க.பரமத்தி
க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி, கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் பி.ஆர்.இளங்கோ க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி, காளிபாளையத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார். 
இதேபோல் மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி க.பரமத்தி ஒன்றியம், கூடலூர் மேற்கு ஊராட்சி, பெரிய திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். க.பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமாண கே.கருணாநிதி க.பரமத்தி ஒன்றியம், சின்னதாராபுரம் ஊராட்சி, வெங்கடாபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கட்சி நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 
க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான நெடுங்கூர் த.கார்த்தி க.பரமத்தி பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகே புன்செய் புகளூர் பேரூர் கழக செயலாளார் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் காகித ஆலை வாயிற் முன்பு டி.என்.பில். தொழிலாளர் சங்கம், காகிதஆலை தொழிலாளார் முன்னேற்ற சங்கம் (எல்.பி.எப்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் சிவகாமி சண்முகம் தனது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கண்ட கோஷம் எழுப்பட்டது.
நொய்யல்
கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் நொய்யல் குறுக்குச்சாலையில் கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் அண்ணாநகர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், மூலிமங்கலம், கொங்குநகர், காகிதபுரம், மரவாபாளையம், சேமங்கி, கவுண்டன்புதூர், முனிநாதபுரம், நடையனூர், கரைப்பாளையம், தோட்டக்குறிச்சி, நஞ்சை புகளூர், புஞ்சை புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஒன்றியம் பள்ளப்பட்டி அண்ணாநகர் ரவுண்டானாவில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கே.வி.கணேசன், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.பி. கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
அரவக்குறிச்சி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.மணிகண்டன், நகர செயலாளர் ம.அண்ணாதுரை, பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பஷீர் அகமது மற்றும் கட்சியினர் அவரவர் வீடுகளின் முன்பு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3 ஆயிரம் இடங்கள்
கரூர் மாவட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் முன்பு என மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்