தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் மீண்டும் தீக்குளிக்க முயற்சி

பொய் வழக்கு போடுவதாக ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற வாலிபர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் தீக்குளிக்க முயன்றார்.

Update: 2021-09-20 19:57 GMT
தஞ்சாவூர்:
பொய் வழக்கு போடுவதாக ஏற்கனவே தற்கொலைக்கு முயன்ற வாலிபர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் தீக்குளிக்க முயன்றார்.
தற்கொலை முயற்சி
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது29). இவர் பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 6&ந் தேதி தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர், தற்கொலை செய்வதற்காக தான் பாட்டிலில் எடுத்து வந்த பெட்ரோலை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மணிகண்டனிடம் இருந்து பாட்டிலை பறித்ததுடன் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தான் பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் மற்றும் குடிநீர் பழுதுபார்ப்பு வேலை பார்த்தபோது, தன் மீது மோட்டார் காணாமல் போனது தொடர்பாகப் பொய் வழக்குப்பதிவு செய்து, தன்னை பணியிலிருந்து விடுவித்துவிட்டனர். இதனால், வாழ்வாதாரத்தை இழந்த தனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது வேலை தர வேண்டும் என பல முறை கோரியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டனை தமிழ் பல்கலைக்கழக போலீசார் கைது செய்து பின்னர் அவரை விடுவித்தனர்.
மீண்டும் தீக்குளிக்க முயற்சி
இந்த சம்பவத்திற்கு பிறகு கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த சோதனைகள், போலீசார் பாதுகாப்பையும் மீறி மணிகண்டன் நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் வந்தார். திடீரென அவர், பாட்டிலை திறந்து பெட்ரோலை தன் மீது ஊற்றி மீண்டும் தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று பாட்டிலை பறித்ததுடன் தண்ணீரை அவர் மீது ஊற்றினர். பின்னர் அவரை போலீசார் ஜீப்பில் ஏற்றி கொண்டு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்