வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது

தக்கலை அருகே வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-20 21:26 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே வங்கி மேலாளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வங்கி மேலாளரிடம் கொள்ளை

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரவிஸ் (வயது 38), தனியார் வங்கியில் தணிக்கை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பிரவிஸ் கடந்த 9&ந் தேதி தக்கலை அருகே ஆழ்வார்கோவில் சந்திப்பு பகுதியில் 10 லட்சம் ரூபாயுடன் நின்று கொண்டிருந்தார். 
அப்போது அங்கு பிரவிஸ் நண்பரான மணலிக்கரை பகுதியை சேர்ந்த பிராங்ளின் ஜோஸ் (38) மற்றும் திங்கள்நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (63), மாகீன் (58) ஆகியோர் வந்தனர். பின்னர் திடீரென பிரவிஸ் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை அவர்கள் பறித்தனர். நண்பரின் இந்த திடீர் செயலால் பதற்றமடைந்த அவர் சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

3 பேர் கைது

இதுகுறித்து பிரவிஸ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வந்தனர். இந்தநிலையில் தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்&இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் தனிப்படை போலீசார் நேற்று வள்ளியூர் அருகே செங்கல் சூளையில் வைத்து 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதாவது, பிரவிஸ் கையில் எப்போதும் லட்சக்கணக்கிலான பணம் வைத்திருப்பதை நண்பர் பிராங்ளின் ஜோஸ் அறிந்துள்ளார். அவரிடம் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஆடம்பரமாக செலவு செய்ய பிராங்ளின் ஜோஸ் திட்டமிட்டுள்ளார்.

சிறையில் அடைப்பு

அதன்படி சம்பவத்தன்று பிராங்ளின் ஜோஸ் தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று பிரவிஸிடமிருந்து ரூ.10 லட்சத்தை பறித்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தை அவர்கள் ஆடம்பரமாக செலவு செய்து பல இடங்களுக்கு சுற்றியதும் தெரியவந்தது. பிராங்ளின் ஜோசுக்கு ஒரு பெண்ணிடம் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. அந்த பெண்ணுக்கும் அவர் கொள்ளையடித்த பணத்தை பகிர்ந்து கொடுத்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும் கைதானவர்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூ.4 லட்சம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்