வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக லாரியில் ரகசியஅறை அமைத்து கடத்திய ரூ.20 லட்சம் சாராயம் பறிமுதல்

செங்கல்பட்டில் வாக்காளர்களுக்கு வழங்க லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான சாராயத்தை திண்டிவனத்தில் போலீசார் பறிமுதல் செய்து, இது தொடர்பாக டிரைவரை கைது செய்தனர்.

Update: 2021-09-22 17:21 GMT
திண்டிவனம், 

புதுச்சேரியில் இருந்து திண்டிவனம், மரக்காணம் வழியாக செங்கல்பட்டு மாவட்டத்திற்கு எரிசாராயம் கடத்தப்படுவதாக திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

 இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையிலான போலீசார், திண்டிவனம் அடுத்த முருக்கேரி பெட்ரோல் பங்க் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் லாரியில் இரு பிரிவுகளாக ரகசிய அறை அமைத்து அதன் மூலமாக எரிசாராயத்தை கடத்தி செல்வது தெரியவந்தது. இதில் தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 60 பிளாஸ்டிக் கேன்களில் 2,100 லிட்டர் எரிசாராயம் கடத்தியது தெரிந்தது. 

வாக்காளர்களுக்கு வினியோகிக்க...

மேலும் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக எரிசாராயத்தை கடத்திச் சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ. 20 லட்சமாகும்.

இதையடுத்து 2,100 லிட்டர் எரிசாராயம் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார், அதன் டிரைவரான விக்கிரவாண்டி அடுத்த சீனிவாசபுரத்தை சேர்ந்த பழனி மகன் சதீஷ்(வயது 27) என்பவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்த விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்