ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்; விற்க முயன்றவர் கைது

ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதனை விற்க முயன்றவரை கைது செய்தனர்.

Update: 2021-09-23 19:58 GMT
தா.பழூர்:

போலீசில் சிக்கினார்
அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்துள்ள கோட்டியால் பஸ் நிறுத்தம் அருகே சிலர் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் தா.பழூர் சப்&இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். மற்ற 6 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது அவர் கார்குடி காலனி தெருவில் வசிக்கும் ரவியின் மகன் கிடா என்ற ராஜ்குமார் (வயது 27) என்பதும், அவரும், தப்பிச்சென்ற நபர்களும் கோட்டியால் பஸ் நிறுத்தம் அருகே விற்பனைக்காக கஞ்சாவை பிரித்து எடுத்துக் கொண்டு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது
மேலும் தப்பிச்சென்றவர்கள் கார்குடி காலனி தெருவை சேர்ந்த அன்பழகனின் மகன் பிரபாகரன்(22), முத்துவின் மகன் வீரவேல்(20), ரவிச்சந்திரன் மகன் வீரக்குமார் (22), தனுஷ் மகன் கபிலன் (23), தர்மலிங்கம் மகன் சின்னத்தம்பி (21), கோட்டியால் பாண்டி பஜார் பகுதியில் வசிக்கும் அண்ணாதுரையின் மகன் செங்குட்டுவன் (19) என்பதும் தெரியவந்தது. மேலும் ராஜ்குமாரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தா.பழூர் சப்&இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜ்குமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தப்பி ஓடிய 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்